நரிகளை பார்க்க வேண்டுமா? லண்டனுக்கு போய்ப்பாருங்கள்

என்னடா நரிகள் லண்டனிலா? சீ சீ இது வேறு ஏதோ நரிகள் கதையாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்போடு வந்த உங்களை ஏமாற்ற போவதில்லை.. நிச்சயமாக இது லண்டனில் இருக்கும் இல்லை இல்லை வாழும் நரிகள் பற்றிய பதிவுதான்.

விலங்குகளில் மற்றவர்களை ஏமாற்றும் திறன் வாய்ந்த விலங்காக நரியை பொதுவாக சொல்வார்கள்.தந்திரமான விலங்கு.பாட்டி வடை சுட்ட கதையில் நரி தந்திரமாக காகத்தை ஏமாற்றியது என்றும் ஒருவகை கதை சொல்கிறது.ஆனால் காகமும் தந்திரமாக நரியை ஏமாற்றியது என்றும் ஒரு வகையாக சொல்லபடுகிறது.என்றாலும் நரி,அதன் குணம் நரிக்குணம் என்று மற்றவர்களை தந்திரமாக ஏமாற்றுவதை பொதுவாக குறிப்பிடுவர்

ஊரிலே பொதுவாக நரிகள் காட்டில் அல்லது வயல்வெளிகள் அல்லது பற்றைகளுக்குள் இருக்கும்.அதுவும் நரிகளை பொதுவாக கிட்டவாக காண்பது கடினமும் கூட.எங்காவது தூரத்தில் அல்லது ஊளையிடும் சத்தத்தின் வாயிலாக "இங்கே நரிகள் இருக்கிறது" என்று பேசிக்கொள்வதுண்டு.அதுவும் நகரப்பகுதிகளில் வாழ்ந்தால் நரிகள் பார்க்க காட்டுக்கு அல்லது மிருகக்காட்சி சாலைக்குத்தான் போக வேண்டும்.அதாவது காட்டுக்குள் அல்லது மக்களை விட்டு விலகித்தான் நரிகள் வாழும் என்பது தாயகத்தில்.அப்படி நரிகள் ஊருக்குள் அல்லது வீடுகளுக்குள் நுழைய முயன்றால் என்ன நடக்கும் என்பது சொல்லி விளங்கவேண்டியதுமில்லை.நரிகள் மட்டுமல்ல நரிக்குணங்களுக்கே இடமிருக்காது.பொதுவாக ஒதுக்கபட்டுவிடும் நரிகளும் நரிக்குணங்களும்.

லண்டனில் நரிகள் செய்யும் வேலைகள் தாங்கமுடியாது.நரிகளின் கூத்துக்கள் பல,தந்திரமென்று அவை நினைத்துச் செய்யுமோ தெரியாது.ஆனால் தன் செயற்பாடுகளை கச்சிதமாக செய்கிறது
மற்றவர்களை தேடவைக்கிறது.பொதுவாக எல்லோரையும் ஓடவைக்கிறது.

இப்படித்தான் ஒரு நண்பர் லண்டனுக்கு வந்த புதிதில் இரவில் களைத்து விழுந்து நடந்து வருகிறார்.இரவு 12 30 மணி வேளையில் உடம்பை முறித்து வேலை செய்துவிட்டு நடந்து வருகிறார்.பொதுவாக லண்டனில் வீடுகளுக்கு வெளியில் எல்லைகளில் நிரலுக்காக மரங்களை வளர்த்திருப்பார்கள்.அந்த சிறு மரங்கள் சல சல என்று சத்தமிட்டதாம்.ஏதோ பெரிய மிருகங்கள் அல்லது கள்ளர்கள் நகர்வதுபோல அந்த சத்தம்.
இரவு நேரம் தன்னை யாரும் அல்லது எந்த விலங்கும் தாக்கலாம் என்று நண்பர் பயந்து விரைவாக நடந்தாராம்.விறு விறு என்று நடந்து கொஞ்ச தூரம் சென்று திரும்பிப்பார்த்தாராம்,
"அட நாய் ஒன்று குறுக்காலை போய் என்னை பயப்படுத்திவிட்டது"என்று மனசுக்குள் நினைத்தாராம்.ஒவ்வொருநாளும் அந்த நாய்கள் இரவு வேளையில் நண்பர் வருகின்றபோது அங்குமிங்கும் ஓடுமாம். நாய் கடித்துவிடுமோ என்று பயந்து பயந்து தான் வருவாராம்.
உண்மையில் அது நாயில்லை அது நரி என்று கண்டுபிடிக்க அவருக்கு இரண்டு மாதமாகிவிட்டது.

இன்னுமோர் நண்பர் லண்டனுக்கு வந்த புதிதில் தன்னுடைய பல நண்பர்களோடு ஒன்றாக இருந்திருக்கிறார்.
அதிகாலை வேளையில் இவர் வேலைக்கு போகும்போது அவருடைய செருப்புகள் காணாமல் போய்விடுமாம்.அவரும் "யாரோ தன்னுடன் இருக்கும் பொடியள் எடுத்திருப்பாங்கள்" என்று நினைப்பாராம்.அதற்கு நண்பர்களுக்கு வாய்பேச்சு திட்டும் மனசுக்குள் வேறு.
ஒரு நாள் அவர் பாதையிலே நடந்து போகின்ற போது அவரின் செருப்பு பாதையிலே கிடந்ததாம்.வீட்டிலேயே வந்து நண்பர்களுக்கு ஏச்சு, 
"என்ன மச்சான் இப்படி இப்படி தூக்கி விசுறீங்க" என்று.
நண்பரே இது நரிகளின் வேலை என்று நண்பர்கள் நக்கலடிச்சு விளக்கம் கொடுத்தார்களாம்.
ம்ம்ம்ம்.... நரிகள் இங்கு வீடு வாசல்கள் வரை வந்து செருப்புகளைக்கூட விடுவதில்லை.

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால்
தாயகத்தில் நரிகள் காட்டில்,நாய்கள் வீட்டு முற்றத்தில்.
லண்டனில் நரிகள் வீட்டு முற்றத்தில்,நாய்கள் வீட்டு படுக்கைகளில் அல்லது மனிதர்களின் இடுப்பில்
அதாவது லண்டனில் நாய்களும் நரிகளும் மக்களோடு தான் இருக்கும்.



ஆனால் தாயகத்தில் நல்ல நாய்கள் மட்டும் வீட்டு முற்றத்தில்,
மற்ற நாய்கள் ரோட்டில்,நரிகள் எல்லாம் காட்டில்

அது தான் நரிகளை பார்க்கவேண்டுமா லண்டனுக்கு போய் பாருங்கள்.



பிற்குறிப்பு:  இது லண்டனில் இருக்கும் நரிகளை பற்றி மட்டும் தான் 
புகைப்படங்கள் மற்றும் வீடியோ உதவி இணையம்

பந்திக்கு முந்தினால் சாப்பாட்டு ராமனா?


கல்யாண வீடுகளில் அல்லது சாப்பாடு சார்ந்த நிகழ்வுகளில் பந்திக்கு முந்த வேண்டும் அடிக்கடி சொல்ல கேள்விப்பட்ட ஒன்று. அப்படி என்றால் பந்திக்கு முந்து என்பது சாப்பாட்டு பிரியர்களுக்கானதா என்பது தான் கேள்வி.அது மட்டுமில்லாமல் பந்திக்கு முந்து என்று சொல்லி பின்னர் படைக்கு பிந்து என்று சொல்வது கோழையர்களுக்கு சொல்லபட்டதா என்பது தான் அடுத்த கேள்வியும் கூட வருகிறது.விருந்தோம்பல் என்ற பாரம்பரியத்தை சிறப்போடு பேணிவரும் தமிழ் சமுதாயத்தில் சாப்பாட்டுப் பந்திக்கு முந்திசெல் என்று பழமொழி தமிழர்களை வழிகாட்டியிருக்குமா? எல்லோரையும் சாப்பாட்டு ராமர்கள் ஆக்கும் செயற்பாடு இல்லையா?
எங்கும் எதிர்த்து நின்று போரிட வல்லவர்கள்,வீர மறவர்கள் என்று புகழோங்கும் தமிழ் சமுதாயத்தில் "படைக்கு பிந்திப்போ"என்று வழிகாட்டியிருக்குமா?அது எல்லோரையும் கோழைகள் ஆக்கிவிடும் என்பது முன்னோர்களுக்கு தெரியாத விடயமா?


அப்படி என்றால் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று எப்படி இந்த பழமொழி உருவாகியது? எதற்காக உண்மையில் சொல்லப்பட்டது , அந்த பழமொழியின் உண்மை அர்த்தம் என்ன ? என்ற கேள்விகள் உருவாகிறது

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முன்னோர்களின் பழமொழிகளையும் மரபுத்தொடர்களையும்
நிகழ்ச்சியின் சுவாரஷ்யத்திற்காகவும்,அதன் உண்மை வடிவங்களை,அர்த்தங்களை நினைவூட்டலாம் என்ற நோக்கோடும் அது ஒழுங்கமைக்கபட்டிருக்கிறது.அதை நிகழ்ச்சித்தயாரிப்பாளர் சிறப்பாகவே ஒழுங்கமைத்திருக்கிறார்.அந்தவகையில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்ற பழமொழியும் ஒருநாள் நேயர்களுக்கு வழங்கபட்டிருந்தது.
நிகழ்ச்சியின் நிறைவில் நிறைவில் வந்த ஜெகதிஷ்வரன் அவர்களால் ஆரோக்கியமான சிந்தனையும் வழங்கபட்டது.அதை நிறைவில் தருகிறேன்.

அதைவிட பந்திக்கு முந்துவதற்கு இப்படியெல்லாம் விளக்கம் கொடுக்ககப்படுகிறது.


பந்திக்கு முந்துவது எதற்காக என்றால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?
சாப்பிடத்தான் என்று அடித்து சொல்வீர்கள்.
சரி சாப்பிடவென்றே வைத்துக்கொள்வோம்.சாப்பிட பொதுவாக வலது கை தானே எல்லோருக்கும்.
அதேபோல பண்டைய காலங்களில் வில்லேந்தி வாளேந்தி சென்ற போர்க்களம் சென்ற போர்வீரர்கள் வில்லின் அம்பை இழுப்பதற்கு தனது வலது கையால் நாணில் அம்பை எவ்வளவு தூரம் பின்னுக்கு இழுப்பர்களோ அவ்வளவு வேகமாக மிகக்கூடிய தூரத்திற்கு அம்பு பாய்ந்து செல்லும்.
அப்படியாக வலது கை பந்திக்கு முந்தியும் போர்க்களத்தில் மிகவும் பின்னுக்கு பின்னுக்கு வந்தும் செல்லவும் வேண்டும் என்பதை அந்த பழமொழி குறித்து நிற்குமாம்.
இதை ஒரு விடுகதை என்றும் சொல்கிறார்கள்.இதை ஒரு விடுகதையாக பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் அது என்ன ? என்றும் கேட்பார்களாம். அப்படியென்றால் இடதுகை பாவனையாளர்களுக்கு எப்படி இது பொருந்தும் என்றும் ஒரு கேள்வியை உருவாகின்றது.அப்படியாயின் வலது கை என்று வரும் இடமெல்லாம் இடது கை என்று மாத்தி வாசியுங்களேன்.


அடுத்து இன்னுமொரு விளக்கம்

பந்தித்தலை கட்டுதல் அல்லது கூடுதல் என்று தமிழகராதியிலிருந்து விளக்கம் கொடுக்கபடுகிறது.
கட்டுதலை முன்னோர்களின் சிந்தனையின் வழியில் தாலிகட்டுதல் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.கூடுதல் என்பதை மணவாழ்க்கையில் கூடுதல் அல்லது மனதோ மனம் கூடி இல்வாழ்க்கையில் இணைதல் என்றும் அர்த்தம் இருக்கிறது.
அந்த வழியில் திருமணத்தை பின்னுக்கு போடாதே , முந்திக்கொள் என்று சொல்கிறதாம்.
அடுத்து படைக்கு பிந்து என்பதில் படை என்பது படைத்தல் என்று பொருள் கொள்ளப்படுகிறது.உயிர்களை படைத்தல் என்கின்ற குழந்தைகள் பெற்றுக்கொள்வதை பிந்திக்கொள் என்று சொல்கிறதாம். அதாவது குழந்தைகளை பெற்றுக்கொள்ள முந்திக்கொண்டால் சனத்தொகை பெருகக்கூடிய வாய்ப்பிருக்கிறதாம். இளையவர்கள் தங்கள் இளமைக் காலத்தின் இனிய பொழுதுகளை மகிழ்ந்து நுகர்ந்து கொள்ளவும் இல்லற வாழ்வை முறையாக முறைப்படுத்த பெரியவர்களால் இளையவர்களுக்கு கொடுக்கப்படும் புத்திமதியாக்கவுமே இந்த பழமொழி பந்திக்கு முந்து படைக்கு பிந்து.... பாருங்கள் எப்படியிருக்கு புத்திமதி இளையவர்களுக்கு . இளையவர்களே கேட்டுக்கொள்ளுங்கள். உலக சனத்தொகை பெருக்கம் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த காலகட்டங்களில் சிலவேளைகளில் மனித சனத்தொகை கட்டுப்பாட்டிற்காக செயற்படும் அமைப்புக்கள் இந்த பழமொழியை கையிலெடுத்தாலும் எடுக்கும்.

இதைவிட முற்றிலும் வீரத்தோடு சம்பந்தப்படுத்தி ஒரு விளக்கம் இருக்கிறது.

பந்தி என்பதற்கு வரிசை என்று ஒரு பொருள் இருக்கிறது.போர் என்று வருகின்றபோது அதன் வரிசையிலே முந்தி செல்ல வேண்டும்,படை என்று வந்துவிட்டால் போர்க்களத்திலே போரின் இறுதிவரை போராடி எதிரியை அழித்து நிலைத்து நின்று கடைசி ஆளாக பிந்தி வரவேண்டும்,அதுவேதான் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று சொல்கிறது பழமொழி.

இப்படியாக பலவாறு அர்த்தங்கள் கற்பிக்கபடும் இந்த பழமொழிக்கான ஆரோகியமான சிந்தனைகளின் தொடர்ச்சியாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்ட திரு.ஜெகதீஸ்வரன் அவர்களின் ஆரோக்கிய சிந்தனை.

ஆகவே என்றும் பெரியவர்களாக,சமுதாயத்திலே மதிக்கபடுபவகளாக,
வெற்றிபெறும் சமுதாயத்தில் உயர்ந்தவனாக இருக்க வழிகாட்டும் பழமொழிதான் ”பந்திக்கு முந்து படைக்கு பிந்து”.
என்றாலும் கல்யாண சாப்பாடுகளின் ஆரம்பத்தில் பந்திக்கு முந்து என்று சொல்வது ஒரு நடைமுறையாகிவிட்டது என்பதும் அதை மாற்றவே முடியாது என்பதும்தான் உண்மையான விடயம்

புலத்தில் தொலைத்த பாவிகள்.....

இந்த மானுடன் ஏதோ தேடுகிறான்
முகத்தில் ஏக்கம் தேங்கிக்கிடக்கிறது.
மானுடன் என்பதைவிட அவன் இளைஞன் ................!

மௌனத்தினால் ஏதோ தேடுகிறானே ....?
இல்லை இல்லை
மனத்தினால் தன் நினைவுகளால்
ஏதோ அசை போடுகிறான்

ரெயினேர்ஸ் லேன் புகையிரத நிலையம்.........

உட்கார்ந்து இருந்தேன் ரெயினின் வரவுக்காக.............?




தமிழா என்று கேட்டான்
யாழ்ப்பாணமா என்றும் கேட்டான்
அக்காவுக்கு இருக்க இடம் வேணும்
இருந்தால் சொலுங்கோ என்றான்
தொலைபேசி இலக்கத்தை கேட்டேன்
தெளிவாக எழுதியே தந்தான்.

எழுதுவதில் தெளிவும்
நடை மிடுக்கோடு எடுப்பும்
உடை காட்டிய நாகரீகமும்
அக்காவின் பாசத்தோடு
இடங்கேட்ட பாசத்துடிப்பும்
அவனை தொடர்ந்து பார்க்க பார்க்க தோன்றியது...........

அலைகிறான்.
ஒவ்வொருவராக அலைகிறான்.
மொழிகடந்து தேடுகிறான்



சிலர் வேண்டிய இலக்கத்தை
மடித்தபடியே பொக்கட்டுக்குள் வைக்க
சிலர் சிரித்தபடியே
ஏளனமாய் அவனை பார்க்க
பலர் முகத்தை சுழிக்க
அவன் தேடுகிறான்...........
ஆனால் அக்காவிற்கு என்று கேட்கவில்லை.............

"பிளீஸ் ரிமெம்பர் பிளீஸ் ரிமெம்பர்" என்று
தொலைபேசி இலக்கங்களை உச்சரிக்கிறான்.................
பலருக்கு வேண்டாத வெறுப்பாகிறது
நக்கல் நளின சிரிப்பும் வேறு ........

அவனுக்கு ஏளனங்கள் புரியவில்லை.
அந்த சிரிப்புகளின் அர்த்தம் தெரியவில்லை.
அந்த முகச்சுழிப்புகளுக்கு பதில் சொல்ல அறியாத அப்பாவி

இடையிடையே கொடுப்பு பற்களுக்குள் மட்டும் சிரிப்பு வேறு அவனுக்கு......?
ஆமாம் மனதாலே ஏதோ யாருடனோ பேசுகிறான்.............

சூழ்ந்த உறவோ
கூடிப்பழகிய நட்போ
பங்கெடுக்கும் சமுதாயமோ
இளமைப்பருவ காதலோ
அவனை ஏமாற்றியிருக்க வேண்டும்
சிந்தனையில் நானிருக்க
இளைஞன் எழுந்து சென்றான் விறு விறு என்று.

":பிளீஸ் ரிமெம்பர் பிளீஸ் ரிமெம்பர் "
தொலைபேசி இலக்கங்களை உச்சரிக்கிறான்
அழகிய பெண்ணுக்கு முன்னாலே...........!

மீண்டும் அதே வேகத்தில் உட்கார்ந்து
மௌனத்தால் மனதாலே அசைபோடுகிறான்

எழுதிய இலக்கங்களுக்கு அழைப்பெடுத்தேன்
தொலைபேசி ஒலிப்பதாய் எனக்கு கேட்டாலும்
அழைப்பில் யாரும் இல்லை.

புலம்பெயர் மண்ணை நோக்கி
பணக்கார தேசம் என்று
பலன் நோக்கி வந்த இளைஞன்
பாவியாய் அலைகின்றானே
பாவமது என்னாகுமோ............?

தொடர்ந்து எடுக்கும் அழைப்புகள்
அழைப்புமணி ஒலிகளோடு மட்டும் நிசப்தமடைகிறது ..........................

மோட்டச்சைக்கிள்






மாலை வேளை
கோடைகால மாலைபொழுது அது,அழகிய சூரிய அஸ்தமனம் காண்கின்ற வேளை
கிராமத்தில் அங்கும் மிங்கும் எல்லா வயதினரும் தங்கள் தங்கள் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டே இருகின்றனர்.
அதுவும் கிராமங்களில் இளைஞர்கள் எப்படி இருப்பார்கள்?
தங்களுக்கு பிடித்த இடங்களில் கூடி நின்று தங்களுக்கே உரித்தான கும்மாளம் பகிடி பம்பல்கள்,ஆளுக்காள் கும்மிகளுக்கும் குறைவில்லை. நகைச்சுவைகளோடு அதற்கான சிரிப்புகள் வானைப்பிளக்கும்,தங்களுடைய கிராமம் தானே என்ற உரிமையோடு ஓடியாடித்திரிந்து நகைச்சுவையோடு நகரும் மாலைவேளை கிராமங்களில்.

அந்தகிராமத்தின் ஆலயத்தினருகில் இருக்கும் சனசமூக நிலையத்தடியில்தான் அஙகிருக்கும் இளைஞர்கள் கூடுவார்கள்.பொதுவாக இளைஞர்களோ வயது கூடியவர்களோ கிராமங்களில் அங்குள்ள பொதுவான இடங்களில் கூடுவது வழமை.கோயில்கள்,வாசிகசாலையடி,குளத்தடி,வயற்கரை,ஆலமரம் போன்ற மரங்களின் கீழ் என்று அந்த இடங்களின் பட்டியல் நீண்டு செல்லும்.
இந்த கிராமத்திலும் ஆரம்பத்தில் கிரிக்கெட் மட்டைகளோடும் ஆறு கட்டைகளோடும் இளைஞர்களும் அவர்களின் வால்களும் வந்துவிட்டாலே அந்த இடம் களைகட்டதொடங்கிவிடும்.சூடுபிடிக்கும் வெயில் கூட சூட்டை தணிக்க தொடங்கும் நேரம் அது.
வால்கள் என்றால் இளைஞர் பராயத்தை தொட்டதும் தொடாததுமாயிருக்கும் அந்த பருவத்தினர் இளைஞர்கள் என்பவர்களோடு உலவும் அந்த வட்டங்கள் தான்.அது கிராமங்களில் இளைஞர்கள் மட்டங்களில் சொல்லப்படும் ஒரு வழக்கு.

ஒவ்வொரு பருவத்தினரும் தங்களுக்கேற்ற இடங்களில்.வயது வந்தவர்கள் கிரிக்கெட் பந்து அடித்தாலும் படாத தூரத்திலில் கூட்டமாக இருந்து அலசுவார்கள்
தங்கள் அரசியல் ஆய்வுகள்,சமூகப்பார்வைகள் என்று கதைகள் நகரும்.
அந்த இடத்தில் தான் யோகன் அண்ணா ஒரு ஓரமாக தன் பார்வையை செலுத்துவார்,சிறந்த ஞாபக ஆற்றலும் படிப்பறிந்த விடயங்கள்,படித்த ஆசிரியர்கள் என்று அவர் பேச்சுக்கள் நகரும்.படிக்கும் காலங்களில் அவர்பெற்ற அனுபவமான விடயங்கள் யாருமறியா விடயங்களாக இருந்தது.அவரை பற்றி இங்கே சொல்லியிருக்கிறேன்

எக்கட்டம் விட்டுக்கொண்டே சிரித்தபடி வருகிறார் கந்தசாமி அண்ணன்,
“என்ன இண்டைக்கும் என்ன கதைபோகுது,என்று கேட்டபடி வந்து வாசிகசாலையடியில் உட்கார்ந்துகொள்கிறார்.
அன்றைய மாலை கிரிக்கெட் விளையாட்டைத்தொடர்ந்து வாசிக சாலைக்கு முன்னாலே இளைஞர்களும் அமர்துகொள்வார்கள்,விளையாடில் புரிந்த வீரக்கதைகளோடும் அளாப்பிய சுணாப்பிய கதைகளால் மாலை நேரத்தில் பூட்டிய வாசிகசாலையடி களைகட்டும்.விளையாட்டோடு இணைந்துகொள்ளமுடியாமல் ரியூசனுக்கு எல்லாம் போய்விட்டு சுத்தியடிச்சுவிட்டு வரும் இளைஞர்களும் அந்த இடத்தைற்கு சரியான நேரத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்கள் ரியூசனுக்கும் போவார்கள்,ரியூசனுக்கு போனவர்களோடும் போய் கவனமாக விட்டுவிட்டும் வருவார்கள்.
பந்து படாத இடத்தில் கூடிக்கதையளந்த வயோதிப இளையவர்களும் மெல்ல மெல்ல நகர்வார்கள் வாசிகசாலை நோக்கி,சிலர் வீட்டுக்கும் சென்றுவிடுவார்கள்.இளைஞர்களோடு கூடி விளையாடிய வால்களை கூட்டிசென்றுவிடுவார்கள் பெற்றோர்.இப்படியாக கூடும் வாசிகசாலை மாலைக்குழு.
அங்கு என்ன விசயம் எப்படி கதைக்க வரும் என்று யாருக்கும் தெரியாது,ஆனால் ஏதோ ஒரு விடயம் கதையளக்க வந்துவிடும்.

”என்ன இது புதுசா ஒரு மோட்டச்சைக்கிள் வந்திருக்காமே,இவன் பெடியன் எடுத்தேயாகவேணும் எண்டு கேட்டு தாயோடை சண்டைபிடிக்கிறான் வீட்டிலை,என்ன அது நல்லா சைக்கிளோ?கந்தசாமி அண்ணையின்கேள்வி,

”அண்ணை இப்ப யாழ்ப்பாணத்துக்காத்தான் புதுசு புதுசா மோட்டச்சைக்கிள் அனுப்புறாங்கள்.ஏனெண்டால் அவங்களுக்கு தெரியும் இங்கை தான் வெளிநாட்டுகாசு நல்லா இருக்கெண்டு.
அதால எதுக்கும் கொஞ்சம் யோசிச்சு செய்யுங்கோ” நாதண்ணையின் கதை.

”அதுவும் பெடியள் உசார் வாற வயசிலை அப்பிடி இப்பிடி திரிய சுத்தியடிக்கத்தான் மனம் கேட்கும்,” நாதண்ணை தொடர்ந்தார்.

”பெடியளின்ரை அவங்கள் அனுப்பிற வெளி நாட்டுக்காசை,அந்த காசிலை தான் நான் இருக்கிறன் எண்டு இவர் நக்கல் பண்ணுறாரோ,அல்லது உண்மையில் நன்மைக்குத்தான் சொல்கின்றானோ” என்று கடுமையாக யோசிக்கிறார் கந்தசாமியண்ணை.

”எண்டாலும் அவன் சொல்லுறதிலை நியாயம் இருக்கு” மனதை தேற்றுகிறார் கந்தசாமியண்ணை.

”நாதண்ணை உங்கடை வயசிலை நீங்க எத்தினையை செய்திருப்பியள்,ஆனால் எங்கடை வயசிலை எங்களுக்கும் ஆசை இருக்கும் தானே” இது அங்குள்ள ஒரு இளைஞர் வட்டத்திலிருந்து தீபன்,இவன் செல்லத்தம்பி அங்கிருக்கும் எல்லோருக்கும்.

அது என்னவென்றால் அந்த மோட்டார் சைக்கிள் இன்னும் சந்தைக்கே வரவில்லையாம்,
அது வந்துகொண்டிருக்கிறதாம்,பொதிகை தொலைக்காட்சியில் வரும் அந்த விளம்பரத்தை பார்த்துவிட்டுத்தான் கந்தசாமிஅண்ணையின் மகன் கேட்கிறானாம்.அதுவும் அந்த மோட்டார்சைக்கிளை அந்த விளம்பரத்தில் சச்சின் ரெண்டுல்கர் ஓடிக்காட்டுகின்றாராம்.இவையெல்லாம் கந்தசாமி அண்ணன் சொன்னபடியே இருக்கிறார்.

”அடேய் செல்லத்தம்பி பொடியா கந்தசாமி அவர் மகனுக்கு எடுத்துகுடுக்க நீங்க எல்லாம் ஓடித்திரிய தானே இந்த கதை சொல்லுறீங்க,அந்த விளம்பரத்திலை அவன் ஓடிக்காட்ட அவனுக்கு காசு, நீங்க பார்த்துபோட்டு அதை வாங்க காசு வேணும்” என்று நகைச்சுவையோடு பேசினார் நாதண்ணை.

”இப்படி மோட்டச்சைக்கிளில் ஓடித்தான் அவன் ஒரு கலர் காட்டி தன்னுடைய காதலை மெருகூட்டபோறான் எண்டு இவருக்கும் தெரியாது,ஒருத்தருக்கும் தெரியாது” மனதிலே சிரிப்போடு முணுணுத்தபடி பொடியள்,

சின்ன சின்ன மாற்றங்களோடும் பல்தேவைகருதியும் சந்தைக்கு வந்தபடியே இருந்தது பல ரக மோட்டார்சைக்கிள்கள்.யாழ்ப்பாணத்திற்காக பெற்றோல் பாவனை அதிகரித்தகாலங்களில் இந்த மோட்டார்சைக்கிள்களின் பாவனையும் அதிகரிக்கத்தொடங்கிவிட்டது,அதே காலங்களில் வெளி நாடுகளிலுருந்து புலம்பெயர்ந்த மக்கள் சுற்றுலாவென்று தாங்கள் பிறந்த மண்ணுக்கே வரத்தொடங்கியகாலம்.இளைஞர்கள் என்றால் இப்படியான மோட்டார்சைக்கிள்தான் ஓட வேண்டும் என்ற ஒரு மாயைவலைக்குள் இருந்தகாலங்கள்.
இன்றும் சந்தையில் வரும் மோட்டார் சைக்கிள்கள் நிச்சயம் யாழ்மண்ணிலும் பவனிவந்துகொண்டேதானிருக்கும்.
திரைப்படங்களை மையமாகவைத்து குழுக்கள் உருவாகியும் அவை தமக்கிடையில் சண்டைகள் பிடிப்பதுமாக நகர்ந்தகாலங்களாகின.
அவைகள் எல்லாம் இப்படியான மோட்டார் சைக்கிள்களை எடுத்து சத்தமிட்டவாறும் உறுமியவாறும் கலக்கங்கள் கொடுத்த காலமும் கூட.
இவையெல்லாம் ஒரு பகுதியான குழுக்களில் மட்டும் தான்,
அதைவிட இந்த மோட்டச்சைக்கிளினால் அவந்த விபத்துக்கள் ஏராளம்,எத்தனையோ நண்பர்களையும் பெரியவர்களை இழந்திருக்கிறோம்

ஆனால் கந்தசாமி அண்ணனின் மகன் கேட்டது தன் காதலை மெருகூட்டவாம்,அது அங்கிருந்த இளைஞர்கள் முணுமுணுத்தது.காதலுக்கு மோட்டச்சைக்கிளுக்கும் எவ்வளவு தொடர்பு?

இளையவர்கள்,காதல்கள்,தேவைகள்,வியாபாரிகள்,தூரப்பயணிகள்பெண்களுக்கும் மோட்டச்சைக்கிள் தேவைகள் என்று இனங்கண்டு பல்வேறு வடிவங்களில் இந்த மோட்டச்சைக்கிள்கள் உருப்பெறத்தொடங்கியது.கொழும்பில் காணமுடியாத மோட்டச்சைக்கிள்கள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் அழகழகாக காணக்கூடியதாக இருந்தது.
ஹீரோ ஹொண்டா என்றும் அந்த நிறுவனத்தின் தயாரிப்போடு இன்னும் பல வடிவங்கள் நிறங்களில் வந்து குவிந்துகொண்டேயிருந்தது.வந்தவுடன் வாங்குவதற்கு நிறங்களோடு புக்கிங்கள் வேறு.இருந்ததை விற்றுவிட்டு புதிதாய் வந்ததை வாங்கவும் போட்டி.ஹீரோ கொண்டா போல இன்னுமொரு நிறுவனம், நினைவிற்கு வரவில்லை,அதை இளைஞர்கள் வாங்க பின்னடித்தார்கள்,தரம்,எடுப்பு குறைவென்று சொல்வார்கள் சிலர்.
அதேபோல போட்டியாக சீன மோட்டச்சைக்கிள்கள் சப்பறங்கள் சிகரங்கள் போல ஒளியூட்டும் நிறங்களாலும் மின்குமிழ்களாலும் அலங்கரிக்கப்பட்டு சந்தைக்கு வந்தது,ஆனால் அது விலை குறைவென்றாலும்அதற்கு மௌசு குறைவுதான். லட்சக்கணக்கில் காசைக்கொடுத்து வாங்க எல்லோரும் பணக்காரர்கள்.

வடமராட்சி,தென்மராட்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் சைக்கிளில் போய் வந்தவர்கள் இருக்கிறார்கள்,அதேபோல் அடுத்து வந்த காலங்களில் வீட்டுக்கொரு மோட்டச்சைக்கிள் வந்த காலமும் இருக்கிறது,
பலரின் தேவைகளை அது நிறைவு செய்திருக்கிறது என்பதும் உண்மைதான்.என்றாலும் பெற்றோலின் தன்னிறைவான வருகையோடு மோட்டச்சைக்கிள் பாவனையின் அன்றைய காலங்களின் அதீதமான பாவனை வளர்ச்சி மனதோடு ஒட்டிவிட்டது


சொல் விளக்கம்
மோட்டச்சைக்கிள்-இது பேச்சு வழக்கு,மோட்டார் சைக்கிள் பொதுவான எழுத்து வழக்கு
அளாப்பல் சுணாப்பல்- சிறுவர்கள் விளையாட்டின் போது பொய் என்று தெரிந்து உண்மை போல் சொல்லப்படும் பொய்
பொடியள்-இளைஞர்கள்

அதிர்ந்தது மத்திய லண்டன்,

விடைபெற்றிருக்கிறது 2011.கிழக்கு பசுபிக் பிராந்திய நாடுகள்,மற்றும் ஆசிய நாடுகளை தொடர்ந்து ஐரோப்பிய மக்களும் 2011ம் ஆண்டுக்கு விடை கொடுத்து
 2012ஆம் ஆண்டை வரவேற்றிருக்கின்றார்கள்.
தொடர்ந்து மேற்கு பசுபிக் பிராந்திய நாடுகள் வரவேற்க 
தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.
பல்வேறு மகிழ்ச்சிகள்,தாக்கங்கள், நல்ல அனுபவங்கள்,என்று யாவருக்கும் தந்திருக்கிறது 2011.
எனக்கும் இணையம்,வானொலி,பதிவுலகம் என்று பல நட்புகளை தந்தது, பிரபல்யங்களை அறிமுகம் செய்தது,பல நட்புகளை உறவுகளை அவர்களின் அன்பின் திறத்தை,ஆழத்தை உணரமுடிந்தது,எதிர்பாராத நட்புகள் உறவுகள் தேடி இணைந்தது,புலம்பெயர்ந்த லண்டன் மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து தேடி வந்து சந்தித்த உறவுகள்,பிறந்த நாள் சிறப்பான நாளில் அமைந்து (11.11.11)அந்த வாழ்த்துக்களை பல ஊடகங்கள் வாயிலாகவும் பகிர்ந்த உறவுகள், இன்னும் மறக்கமுடியாத பல நாள்கள் மற்றும்,தகைமை முன்னேற்றங்கள்,புதிய தேடல்கள்,பல களங்கள்,என்று சிறப்பான அனுபவங்களோடு விடைபெறுகிறது

சிறப்பான அனுபவங்களை தந்த 2011 ஆம் ஆண்டை மகிழ்வோடு விடைகொடுத்து 2012 ஆம் ஆண்டை மனம் மகிழ்ச்சிகொண்டு வரவேற்போம்.
லண்டனில் சரியாக நள்ளிரவு 12 மணியளவில் மத்திய லண்டனின் மணிக்கூட்டுகோபுரத்தின் கடிகாரம் ஒலி எழுப்பத்தொடங்கியதும் அதிர்ந்தது லண்டன்,ஒருபுறம் பல்லொளி தரவல்ல பட்டாசுகள் ஒலி எழுப்ப மறுபுறம் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தின் ஒலி,வானைப்பிளக்குமளவிற்கு Happy New Year 2012 என்ற உற்சாகமான சத்தத்தோடு(புதுவருட வாழ்த்துக்கள் 2012 என்று தமிழில் சொல்ல இவர்களுக்கு வராதே-இவர்கள் ஆங்கிலேயர்கள்) பல்லொளியோடு நள்ளிரவில் வானம் மகிழ்வுற்று வழமைபோல வரவேற்றிருக்கிறது லண்டன் மாநகரம்,
அந்த அழகை இந்த வருடம் எனக்கும் காணக்கிடைத்தது.
அந்த புகைப்படங்களை பதிவு செய்கிறேன்.

தொடர்ந்து இன்முகத்தோடு வரவேற்கும் 2012 எல்லோருக்கும் சிறப்பான ஆண்டாக இருக்கட்டும்
யாவருக்கும் மேலான நட்போடும் அன்போடும் வாழ்த்துக்களை இதயத்தின் ஆழத்திலிருந்து பகிர்ந்துகொள்கிறேன்.





இணையத்திலிருந்து சுட்ட புகைப்படம்

பிறந்திருக்கும் இந்த புதிய வருடம் 2012 யாவருக்கும் மனம் நிறைந்த மகிழ்ச்சியை கொடுக்கவேண்டும் என்று அன்போடு தனது வாழ்த்தை பதிவு செய்கிறது கரவைக்குரல்.

மனுசரை படிக்கவேணும்............தன் நிலை மறந்தாலும்!!!!

அந்த மாலை நேர பொழுதுகளில் கூடும் மாலை நேர வாசிகசாலை  குழுவின்ஓரமாகத்தான் யோகன் அண்ணாவும் உட்கார்ந்தபடியே முணுமுணுத்தபடி இருக்கிறார்.
ஊரில் உள்ள இளைஞர்களும் பெரியவர்களும் மாலை வேளையில் ஒன்றாக கூடி கதையளக்குமிடம்தான் 
அந்த மாலை நேர வாசிகசாலைக்குழு.யோகண்ணாவும் அதில் ஒரு ஒரமாக தன் பாட்டுக்கு இருப்பார்


பொதுவாக அந்த ஊரின் எங்கும் நடந்தபடி திரிவார்,அதைவிட கூடிய நேரங்கள் பேப்பர் படிப்பதுதான்
அவரின் பேச்சுக்களை கிண்டலாக அவ்வூரின் இளையவர்கள் சிரிப்பதுமுண்டு, ஏன் சில வயதானவர்களும் தான்,
ஏனென்றால் ஒரு சித்தசுவாதீனமற்றவராக அவர் வாழ்க்கையின் காலங்கள் சென்றுகொண்டிருந்தமையேதான்.
சித்தசுவாதீனம் என்று பதிய எழுத்துக்கள் மறுக்கிறது,
தன் நிலை மறாந்தாலும் அவரின் பொழுதுபோக்கு பத்திரிகை மற்றும் நூல்களை வாசிப்பது என்றால் அவர் எப்படியிருந்திருப்பார் என்பதை அவரின் நிலையிலிருந்து நினைத்துக்கூட பார்க்கமுடியாது.
பத்திரிகைகளில் படித்தவற்றை பற்றி சொல்லியபடியேயிருப்பார், உண்மையில் அவருக்கு நேரமறிந்து எதையும் சொல்ல அவருக்கு தெரியாது.
அதுவும் படிக்கின்ற மாணவர்களை கண்டுவிட்டால் .......ம்ம்ம்ம்ம்ம்
அதுதான் அவ்வூரின் இளைஞர் வட்டங்களை கண்டால், தான் படித்த 
கல்வியைபற்றியும் அதை பயன்படுத்திய முறை பற்றியும் சொல்வார்.கணித பாடத்தை கற்ற அவர் கணிதத்தின் சூத்திரங்களையும் செய்முறைகளையும் நினைவில் உள்ளவற்றை நினைவுபடுத்துவார்.
ஹாட்லிக்கல்லூரியின் காலங்களில் அவர் படித்த காலங்கள் அதிபர் பூரணம்பிள்ளை அவர்கள் இருந்த காலம்.
கல்லூரியில் அதிபர் பூரணம்பிள்ளை அவர்களுக்கு இருந்த மதிப்பு அதுமட்டுமல்லாமல் அவர் அதிபராக இருந்து பணி செய்தமையை உலகம் பாராட்டியும் இருந்தமை கல்விச்சமூகத்தினர் பாமர சமூகம் என்ற வேறுபடுகளின்றி கூடுதலானவர்கள் அறிந்த ஒரு விடயம்.
ஹாட்லிக்கல்லூரியின் பொற்காலங்களில் அதிபர் பூரணம்பிள்ளை அவர்களின் காலமும் ஒன்றாகும்.
அவர் காலங்களில் தான் படித்த பெருமையை அடிக்கடி யோகன் அண்ணா நினைவு படுத்துவார்.
அதுவும் அங்குள்ள இளைஞர்களில் யாராவது ஹாட்லியில் படித்துவிட்டால் அதை நினைவுபடுத்தியபடியேயிருப்பார்.இப்படியான விடயங்களை யாராவது வெள்ளைக்கார உடை அணிந்து சொல்லியிருந்தால் யாராவது கைகட்டியிருந்து கேட்டிருப்பார்கள்.ஆனால் யோகன் அண்ணாவின் வாயில் இருந்து வந்ததால் தான் எல்லோருக்கும் சிரிப்பு.ஆனால் தன் நிலை மறந்திருந்து தனது அருமையான பெருமையான நினைவுகளை மீட்டும் கணிதம் சார்ந்த விடயங்களில் தனது நினைவுகளை வைத்திருக்கும் அவர் பெருமை என்பது தனியானது தான்,
என்றாலும் இளைஞர்களுக்கு பகிடி விடாமலும் மற்றவர்களை கும்மி அடிக்காமலும் இருக்கமுடியாதே..
ஒரு நாள் வாசிகசாலை மாலைக்குழுவின் ஓரமாக தன் நிலையில் தன்பாட்டிற்கு முணுமுணுத்தபடி உட்கார்ந்து இருக்கிறார் யோகன் அண்ணாவும்

‘என்னவாம் புதினம் பேப்பரிலை யோகன் அண்ணா?
 பார்த்துமுடிஞ்சுதோ பேப்பர் எல்லாம்” செல்லத்தம்பியின் செல்ல பகிடி போல இருந்தது கேள்வி
”அந்த ஆள் நாலுதரம் பேப்பரெல்லாம் வாசிச்சு முடிஞ்சிருக்கும்” அங்கிருந்து வந்த இன்னுமோர் நக்கல்.

”பேப்பரோ முந்தி எல்லாம் சண்டை இல்லை நாங்கள் எல்லாம் ஹாட்லிக்கு நடந்து போவம்,சீனப்பாவின் தட்டிவானிலும் போவம்,இப்ப பேப்பரில் சண்டை தான் கூடிபோச்சு” யோகன் அண்ணா கொஞ்சம் பொருத்தமாகவும் தன் நினைவுகளை மீட்டி பொருந்தமில்லாமலும் பதிலை சொன்னார்.
”சீனப்பா” அந்தக்காலம் வடமராட்சியில் பாடசாலை சேவை வாகன சேவை செய்துவந்தவர்,மிகவும் பிரபல்யமாக அவரின் வாகன சேவை இருந்தமையை இங்கு குறிப்பிடலாம்,

”தொடங்கிட்டார் மச்சான்,தான் நடந்த கதை சொல்லுறார்” என்றபடி கண்ணைக்காட்டி நக்கலடித்தபடி பேச தொடங்கினார்கள் இளைஞர்கள்.
ஹாட்லியை பற்றி தொடக்கினால் அல்லது ஏதாவது கணிதத்தை பற்றிக்கேட்டால் அவரை தொடர்ந்து பேசவைக்கலாம் என்று எண்ணினார்கள். வேறு என்ன பேசவைத்து கிண்டல் பண்ணி அந்த மாலை நேரத்தை கழித்துவிடலாம் என்பது தான் அந்த இளஞர்களின் எண்ணம்.

”யோகண்ணா ஹாட்லிக்கு சீனப்பாவின் தட்டிவான் நேரத்து போய்விடுமோ” சீனப்பாவின் தட்டிவானின் வேகம் சீனப்பா ஓட்டும் வேகத்துக்கும் நக்கல்
”பூரணம்பிள்ளையிடம் அடிவாங்கினீங்களா? எத்தனை அடி வாங்கினீங்கள்?”  என்றவாறு இளைஞர்கள் சிரித்தபடியே.
அவர் படித்த அதிபருக்கும் அவருக்குமான இன்னுமோர் நக்கல் 

தன்னைச்சாடி நக்கல்கள் வருவது கண்டு யோகண்ணாவின் மனம் கொதிக்கத்தொடங்கியது, 
தன்னிலை மறந்தவர் என்ற நிலையிலும் நக்கல்களை அடையாளம் காணுகிறார் யோகண்ணா.
மனங்குமுறியபடி

”என்ன நாலுபோட்டுத்தரவோ...........”கோபத்தோடு கேட்கிறார்.
ஒரு கணம் பயந்தனர் இளைஞர்கள்.அதுவும் தன் நிலை மறந்தவர்கள் அடிக்கும் போது அதன் வலியும் நோவும் அதிகமாகத்தான் இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியும்.
தொடர்ந்தார் யோகண்ணா
”என்ன பூரணம்பிள்ளை என்பவர் என்ன இலேசாகப்போய்விட்டாரோ,”
”அவர் நடை உனக்கு தெரியுமா? உடை உனக்கு தெரியுமா?
என்ன பின் பக்கமா நாலு போட்டு தரவோ”

”இந்த ஊருலகம் எல்லாம் அவரை தெரியும்”
”எப்படி படிப்பிச்சவர் தெரியுமோ”
ஆஆஆ பின்வளமா நாலு போட்டுத்தரவோ”

 நாலு மனுசரை படியுங்கோ,சரியா படிக்கவேணும் .........ஆஆஆஆஆ
என்று என்று கோபத்தொடு திரும்ப திரும்ப சொன்னார்.






 தன் நிலை மறந்து இந்த ஊரிலும் அந்த வாசிகசாலையிலும் தன் நாள்களை கழித்துக்கொண்டு திரிந்து செல்லும் யோகண்ணா சொன்னவை தான் அவை.
குளிரென்றாலும் சூடென்றாலும் எங்கெங்கு இடமிருக்கிறதோ அங்கெல்லாம் தன் நித்திரை பொழுதுகளை கழித்து வரும் யோகண்ணா சொன்ன அறிவுரைகள் தான் அவை. 
”நாலு போட்டுத்தரவா நாலு போட்டுத்தரவா” என்று அடிக்கடி கேட்கும்போது இளைஞர்களுக்கோ அல்லது அங்கு கூடி நின்றவர்களுக்கோ அப்படியான பேச்சுகள் அவரை சித்த சுவாதீனம் அற்றவராக தெரிந்திருக்கும்,அதனால் தான் அவர்களுக்கு அவருடைய பேச்சுக்கள் சிரிப்பை கொடுத்திருக்கலாம்,ஆனால் அவர் தன் பாடசாலை அதிபர் ஆசிரியர்களில் வைத்திருந்த உண்மையான மரியாதையையும் அதை எப்போதும் நினைக்கின்ற பண்பும் என்றும் மறக்காதவராய் இருக்கின்றது என்றால் யார் இங்கு தன் நிலை மறைந்தவர்கள்?
என்றோ படித்த கணிதத்தின் சூத்திரங்களை நினைவோடு நினைவாக ஞாபகப்படுத்துவாரென்றால் அவரின் கல்வியறிவின் ஆழம் அன்றையகாலத்தில் எப்படி இருந்திருக்கும் என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுந்திருக்கவேண்டும்,
”மனுசரை படியுங்கோ” என்பதில் வந்த ஆழமான உட்கருத்து எல்லோராலும்
சித்தசுவாதீனமற்றவரென்று அடையாளப்படுத்தியவரிடம் இருந்துவருகிறதே  அடையாளப்படுத்த முடியாதவர்களாய் வாய்விட்டு சிரிக்கமுடிந்ததே தவிர 
அவரின் வசனங்களில் இருந்த ஆழமான உணர்வுகளை
புரிந்துகொள்ளவில்லை.
உண்மைதான்,கோட்டுசூட்டு வெள்ளைக்கார உடை அணிந்து உள்ளொன்றோடு புறம் ஒன்று சொன்னால் ஏற்றுக்கொள்ளும் இந்த மனிதம் யோகண்ணையின் உண்மையான உணர்வை அதிலிருக்கும் உண்மை அர்த்தத்தை புரிந்துகொள்ள மறுக்கிறது,
மனிதர்களைப்படிக்கவேணும்!!!!!!!! 

பூவரசம் பூவே நலமா

பூவரசம்பூவே நலமா
பூவாக அழகான இதழ் விரித்து
பூவுக்குள் இராஜ்ஜியம் அமைத்து
பூவரசனான கதை மொழியாயோ


தூரத்திலிருந்து ஒரு குரல்
பூவரசம்பூவே நலமா

சூரியவொளிவீச்சின் கதிர்களின் நடுவில்
மஞ்சள் புன்னகையாய் மலர்ந்து
மருதனிலங்களின் காலை நிலவான
தாயகத்தின் அழகிய மலரே நீ நலமா

கவிஞர்களின் கவிப்பொருளாக நீயில்லை
காதலர்களின் அன்பு மலராகவும் நீயில்லை
பூஜைகளில் உனக்கென்று இடம்காணவில்லை
பூத்தபூவிலும் மணம்பரப்பவில்லை
பூவுக்கொரு அரசனான பூராயம் மொழியாயோ
பூவரசம்பூவே நலமா


சொந்தமுகவரிகள் விட்டு
புலத்தில் பலமுகவரிகள் எழுதி
பலமான வாழ்வை தேடி ஓடி நடைபோடும்
சொந்தங்கள் தேடும் உண்மை வாழ்க்கையின் நடுவில்
தாயக நிலமதுவில் காணுமிடமெல்லாம்
தாராளமாய் உன் நிழல்கள்
சுமைகளை இறக்கிவைக்கும்
சுகமான உன் தென்றலை நினைவில் அழைக்கிறது........

தட்டைவடைக்கு உன் இலைகள்
தூக்கித்தரும் அந்தமாதிரி
நாவுக்கு இசைவான ருசியாக...

வாத்தியார் வகுப்பறையில்
மேசைமேலே காத்திருக்கும்,
மாணவனாய் வளரும் காலம்-உன்
சுள்ளித்தடி சுணாய்க்கும்!
நீள்தடி முதுகுக்கு அடையாளம்

பூவரசம் பூவே நலமா

உன் இலைகளால் ”பீப்பி” செய்து ஊதியகாலங்கள்
வேலியில் கதியாலாய் வரிசையாக அழகுபெற்ற நினைவுகள்
வயலுக்கு உரமாக உன் இலைகளின் பயன் தரு சிறப்புக்கள்
வண்ணமான வண்ணாத்துப்பூச்சிகளின் ஆரம்பமே
மசுக்கொட்டிகளின் தங்குமிடமாய் உனிலிருந்தது......
அவையிறங்கும் உன் தண்டிலிருந்து ஓவ்வொன்றாக
நினைக்கும்போதே எங்கோ கடிக்கிறது............
பூவரசம் பூவே நலமா

பூவுக்குள் அரசாளும் பூவரசு
உன் அரசுரிமை உனக்கிருக்கிறது
பெயரோடும் ஒட்டியிருந்து ஒப்புவிக்கிறாய்!
தாயகத்தின் அடையாளத்தில் நிலைபெறு உரிமை உனக்கிருக்கிறது
தறித்தாலும் உன் வேர்களாலும் கதியால்களாலும் நீ வாழ்வாய்
புலமெங்கும் சென்றாலும் திரிந்தாலும்
அழகுறு மலர்களை எங்கெங்கும்
கண்ணாரக்கண்டு மகிழ்ந்தாலும்-உன்
முகமதில் மஞ்சொளிவீசும் அழகினில்
அகமது மகிழ்ந்திடும்-என்றென்றும்

பூவரசம் பூவே நலம் தானே,


படங்கள்- இணையம்